ஶ்ரீ குருவாயூரப்பா அகிலகுரு பகவன் நமஸ்தே |
ஸ்ரீ நாரயணீயம் 93-வது தசகத்தில் பட்டத்ரி ஸ்ரீ குருவாயூரப்பனிடம், இருபத்து நான்கு குருக்கள் பற்றி இவ்வாறு👇🏻 கூறுகிறார்.
1. உமது கருணையினால் உறவினர்களிடம் உள்ள பாசத்தை நான் விடவேண்டும். இவ்வுலகம் மாயை என்று உணர்ந்து, எல்லாவற்றையும் விலக்கி, உம்மிடத்திலேயே மனதை நிலைநிறுத்தவேண்டும். தவறான புரிதலினால் பேதங்கள் ஏற்படுகிறது. நல்லவை, கெட்டவை என்ற ஞானத்தால் விதி அல்லது விதிவிலக்கு தோன்றுகிறது. தங்களிடத்தில் மனதை நிலைநிறுத்தியவனுக்கு விதி, விதிவிலக்கு என்ற வேறுபாடு எவ்வாறு தோன்றும்?
2. இவ்வுலகில் பசி, தாகம் இவற்றைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே பல பிராணிகள் வாழ்கின்றன. பகுத்தறிவுள்ள மனிதன் அவைகளைவிட உயர்ந்தவனாகிறான். மனித பிறப்பு உண்மையில் அரிது. மனிதன் தனக்குத்தானே நண்பனாகவும், பகைவனாகவும் இருக்கிறான். உம்மிடத்தில் பக்தி கொண்டு தனது துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை அறிபவன் தனக்குத்தானே நண்பனாகவும், அவ்வாறு இல்லாதவன் தனக்குத்தானே பகைவனாகவும் ஆகிறான்.
3. பரமனே! உம்முடைய அருள் கிடைத்தால் உலகில் உள்ள எதுதான் குருவாக ஆகமுடியாது? அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமி பொறுமையாக இருக்கிறது. அந்தப் பொறுமையை நான் பூமாதேவியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஈசனே! வாயுபகவானுக்கு அனைத்து பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும் பற்றற்று விளங்குகிறார். அவரிடமிருந்து பற்றற்ற தன்மையைக் கற்க வேண்டும். எங்கும் பரவியிருந்தும் பாதிக்கப்படாமல் இருக்கும் ஆத்மாவைப் பற்றிய தன்மையை ஆகாயம் என்ற குருவிடமிருந்து கற்க வேண்டும்.
4. தண்ணீரைப்போல் தெளிவாகவும், தூய்மையாகவும், இனிமையாகவும் நான் இருக்க வேண்டும். அக்னி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு களங்கமில்லாமல் இருப்பதைப் போல் நானும் இருக்க வேண்டும்.
மரங்களில் அக்னி இருப்பதைப் போன்று எல்லா உயிர்களிலும் நான் இருப்பதாக அறிய வேண்டும். சந்திரனின் கலைகள் வளர்ந்து தேய்வதைப் போல், வளர்ச்சியும், தேய்வும் சரீரத்திற்கே, ஆத்மாவிற்கு இல்லை என்று அறிய வேண்டும். ஒரே சூரியன் தண்ணீரில் வெவ்வேறாகத் தோன்றுவதுபோல், ஒரே ஆத்மா சரீரங்களில் வெவ்வேறாகத் தோன்றுகிறது என்று உணர வேண்டும்.
5. வேடனால் கொல்லப்பட்ட தன் மனைவியையும், குஞ்சுகளையும் நினைத்து சோகத்தினால் இறந்த மாடப் புறாவைப் போல் நான் ஆகக் கூடாது. மலைப்பாம்பைப் போல் கிடைத்ததை உண்டு பசியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். கடலைப் போல் கம்பீரமாக இருக்க வேண்டும். தீயில் தானாகவே விழும் வீட்டில் பூச்சியைப் போல் பெண் மோகம் முதலிய அற்ப சுகங்களில் விழாமலிருக்க வேண்டும்.
பூக்களிலிருந்து தேனை மட்டும் சேகரிக்கும் வண்டைப் போல் விஷயங்களின் சாரத்தை மட்டும் சேர்ப்பவனாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வண்டைப் போல் செல்வத்தை சேகரித்து அழியாமல் இருக்க வேண்டும்.
6. ஈசனே! ஆண் யானை பெண் யானைக்குக் கட்டுப்படுவதுபோல் பெண்களைக் கண்டு மோகமடையாமல் இருக்க வேண்டும். தேனீக்கள் தேனைச் சேர்த்து வைப்பதுபோல் அதிகமான பொருளைச் சேர்த்து வைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், தேனீ சேர்த்து வைத்த தேனை, தேன் எடுப்பவன் கவர்ந்து செல்வதுபோல், சேமித்து வைத்த அப்பொருளை யாராவது கவர்ந்து செல்வார்கள்.
கீழ்த்தரமான பாட்டுக்களில் மயங்கும் மானைப் போல நான் மயங்காமல் இருக்க வேண்டும். உணவின் மீது உள்ள ஆசையால் தூண்டிலில் அகப்படும் மீனைப் போல உணவில் அதிக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பிங்களை என்பவளைப் போல் ஆசையில்லாமல் தூங்க வேண்டும். குரரம் என்ற பறவை மூக்கில் இறைச்சியை வைத்துக் கொண்டிருந்ததால் மற்ற பறவைகளால் கொல்லப்பட்டது. அதைப் போல் பொருட்களில் ஆசை வைத்து நான் துன்பப்படாமல் இருக்க வேண்டும்.
7. சிறு குழந்தை, மரியாதை மற்றும் அவமதிப்பு உணர்வு இல்லாமல் இருப்பது போல் இருக்க வேண்டும். கன்னிப் பெண்ணின் கையில் உள்ள ஒற்றை வளையல் போல வீண் பேச்சுக்களின் தொடர்பு இல்லாமல் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். அம்பு தயாரிப்பவன், அரசன் வரும் அறிவிப்பை அறியாததுபோல உம்மையே நினைத்து வேறு ஒன்றையும் நினைக்காதிருக்க வேண்டும். எலிவளையில் பாம்பு குடியிருப்பதுபோல, எந்த வீட்டிலும் ஆசை வைக்காமல், பிறர் இல்லத்தில் வாழ வேண்டும்.
8. உம்மால் படைக்கப்பட்ட உலகம் உம்மிடத்திலேயே அடங்கி விடுகிறது என்பதை சிலந்திப் பூச்சியிடமிருந்து அறிந்து கொள்வேன். உம்மையே நினைத்திருப்பது உம்முடைய வடிவத்தை அளிக்கிறது என்ற உறுதியான பாடத்தைக் குளவியிடமிருந்து கற்றுக் கொள்வேன்.
புழுக்களாகவும், சாம்பலாகவும் ஆகும் இந்த உடல் ஒரு சிறந்த குருவாக விளங்குகிறது. கவனமாக சிந்தனை செய்தால் இந்த உடல் ஞானத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும். அதிலும் பல நோய்களால் பாதிக்கப்பட்ட என் உடலே எனக்குக் குருவாய் விரைவிலேயே வைராக்கியத்தை அளிக்கிறது.
9. குருவாயூரப்பனே! இந்த உடல் மீது கொண்ட ஆசையால் வீடு, பொருள், மனைவி ஆகியவற்றில் மக்கள் பற்று வைத்து உம்மை மறக்கிறார்கள். அந்த உடல் இறுதியில் அக்னிக்கும், நாய்க்கும் இரையாகிறது. வாழும்போது கண், காது, தோல், நாக்கு போன்ற இந்திரியங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. அந்தோ! உன் தாமரைப் பாதங்களை உடலின் ஒரு இந்திரியமாவது நாடுவதில்லை.
10. தாமரைக் கண்ணனே! இந்த உடலில் வைத்த ஆசையைத் தவிர்க்க முடியாதெனில், என் வியாதிகளைப் போக்கி உம்முடைய திருவடித் தாமரையில் அசைக்க முடியாத உறுதியான பக்தியை அளிக்க வேண்டும். பல பிறவிகளுக்குப் பிறகு அடைந்த இந்த பிராம்மண சரீரத்தைக் கீழ்த்தரமான இந்திரிய சந்தோஷத்திற்குள் தள்ள வேண்டாம். குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்ற வேண்டும்.
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்|🙇🏼♀🙇🏼♀🙇🏼♀
ஸ்ரீஹரயே நமஹ|
ஸ்ரீஹரயே நமஹ|
ஸ்ரீஹரயே நமஹ